• Wed. May 25th, 2022

369-View

பிரபஞ்ச துகள்

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் மகிமைகள்

Jun 22, 2021

திருவண்ணாமலையில் திவ்யமாக காட்சி தரும் ஜோதி வடிவான இறைவனின் மகிமைகளை அத்தனை எளிதில் எடுத்துரைக்க முடியாது . தன்னுடைய லட்சகணக்கான பக்தர்களை எந்த வேறுபாடும் காட்டாமல் ஏற்றுக்கொள்ளும் ஒரே இறைவன் நம் சிவபெருமான் ஒருவரே.

திருவண்ணாமலைக்கு வரும் அன்பர்களின் வாழ்வில் திருப்பங்கள் உண்டாகும் என்பது சத்தியம். இறைவன் நம் பாவங்களை தீர்க்க கிரிவலம் எனும் முறையை உண்டாக்கினார். இந்திரன் முதல் தேவாதி தேவர்கள் அனைவரும் இங்கே வந்து கிரிவலம் செய்து தங்கள் பாவங்களை போக்கி விமோசனம் பெற்றிருக்கும் போது சாதாரண மனிதர்கள் வாழ்வில் மோட்சம் கிடைக்க வேண்டி கிரிவலம் செல்வது சிறப்பானது. (tiruvannamalai girivalam)

நம் பிறப்பின் நோக்கம் என்ன என்பதை நாம் அறிய முற்படும்போது நாம் அடையும் திருத்தலம் திருவண்ணாமலை ஆகும். முக்தி அடைதல் பற்றி காலம் காலமாக பேசி வரும் இந்த தேசத்தில் திருவண்ணாமலையாரை நினைத்த கணமே முக்தி நமக்கு உண்டாவதாக சொல்லப்படுகிறது.

இந்த பிரபஞ்சத்தை தன்னுடைய நடன அசைவினால் இயக்கிக் கொண்டிருக்கும் சிவபெருமான் பற்றி பல ரகசியங்கள் இன்னமும் உலகிற்கு வராமல் காக்கப்படுகின்றன. பஞ்ச பூதங்களால் நிறைந்த நம் வாழ்வில் பஞ்சபூதங்களின் சக்திகளை உள்ளடக்கிய சிவன் கோயில்களுக்கு செல்வது நம் ஆத்ம பலத்தை அதிகரிக்கும். (sivan temples)

மனத்தூய்மை என்பது மற்றவர்கள் முன் நல்லவர்களாக இருப்பது அல்ல.. பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த மனிதர்கள் மிகுந்த மனத்தூய்மையோடு இருந்ததால் இறைவன் அவர்களோடு சமமாக வசித்து வந்தார்.

ஆனால் யுகங்களின் மாற்றத்தில் தற்போது உள்ளிருக்கும் அசுத்தங்களை மறைத்து தங்களை மனத்தூய்மை கொண்டவராக காட்டிக் கொள்வதே தற்போது தூய்மை என்றாகிவிட்டது. அவர்களின் பகல் வேஷத்தை மனிதர்கள் அறியாமல் இருக்கலாம் ஆனால் இறைவன் அனைத்தையும் அறிந்ததால் நம்மை விட்டு ஒளியாண்டு தூரங்களுக்கு சென்று விட்டார்.

திருவண்ணாமலை தல மகிமை

ஒருமுறை உமையம்மை கணவரின் கண்களை விளையாட்டாக மூட பிரபஞ்சங்கள் எல்லாம் இருண்டு போனது. இறைவனும் அதற்கு தண்டனையாக இறைவியை பிரிய நேர்ந்தது. இறைவனின் திருவிடையாடலை அறிந்த தாய் அமைதியாக பூலோகம் வந்து இமயமலை முதல் திருவண்ணாமலை வரை தவம் இருந்தாள். அன்னையின் தவத்திற்கு அண்ணாமலையார் காட்சி தந்தார்.

இனி என்றும் உங்களை பிரியாமல் இருக்குமாறு வரம் வேண்டும் எனக் கேட்க இறைவன் இந்த மலையை ஒருமுறை வலம் வருவாயாக என்றார். சிவனின் லீலைகளை அறியாதவரா பார்வதி அன்னை.. காதலோடு அண்ணாமலையார் வாசம் கொள்ளும் ஜோதி வடிவான திருவண்ணாமலையை அடி மேல் அடி வைத்து வலம் வந்தார்.

அன்னை வலம் வரும் வழி தெரியாமல் திகைக்கையில் நேர் அண்ணாமலை எனும் இடத்தில் அன்னைக்கு ரிஷப வாகனத்தில் காட்சி தந்தார். அதன் பின்னர் அவர் காட்டிய வழியில் கிரிவலம் முடித்து தன்னை வணங்கிய மனைவி பார்வதியை தன்னுடைய இடபாகத்தில் ஏற்றுக் கொண்டார். இன்றளவும் அர்த்தநாரீஸ்வரர் வழிபாடு அன்னை வலம் வந்த அந்த ஒரு நாளான சித்ரா பௌர்ணமி அன்று மட்டுமே நடக்கிறது.

அன்னை பார்வதி கருணையின் ஊற்றானவள் அல்லவா.. என்னைப் போலவே பக்தியோடு மலையை சிவனாக பாவித்து கிரிவலம் வரும் மக்களுக்கு அவர்கள் வேண்டும் வரத்தை நீங்கள் அளிக்க வேண்டும் என்று அன்னை நமக்காக வரம் கேட்டாள். இறைவன் அவ்வாறே ஆகட்டும் என்று அருளினார். (chitrapournami)

இந்தக் கொரோனா தாக்கம் காரணமாக கிரிவலம் (girivalam) செல்வது தற்போது தடைபட்டு இருக்கிறது. எனினும் இது நிரந்தரம் அல்லவே. இறைவனை பக்தியோடு நீங்களும் கிரிவலம் வரும்போது உங்கள் நியாயமான கோரிக்கைகளை இறைவன் ஆனந்தமாக நிறைவேற்றி வைப்பார். உங்கள் கர்ம கணக்குகளை அவர் தீர்த்து வைப்பார்.

திருவண்ணாமலைக்கு செல்லும் வழி

சென்னையில் இருந்து சாலை மார்க்கமாக 5 மணி நேரத்திற்குள் திருவண்ணாமலையை அடைய முடியும். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இங்கே செல்ல தனிப் பேருந்துகள் இயங்குகின்றன.

இறைவன் எங்கோ இல்லை.. நம்முள் இருக்கிறார். தொடர்ந்து தியானிப்போம் அவனருளால் அவன் தாள் வணங்குவோம்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *