Come lets watch this movie together! Atraangi Re
அனேகமாக இந்த ட்ரைலர் வந்த போது எல்லாரும் தனுஷை திட்டி தீர்த்திருப்பார்கள். ஒரு ஹீரோயின் இரண்டு ஹீரோ, அப்போ எனனை டைவர்ஸ் பண்ணிட்டு அவன் கூட போக வேண்டியது தானே எனும் தனுஷின் ஆத்திரம், எனக்கு உன்னையும் பிடிச்சிருக்கே எனும் சாரா அலிகானின் ஏக்கம் பார்க்கும் போது என்ன வழக்கமான முக்கோண காதல் கதையா ஆனால் பெண்ணுக்கு இரண்டு பேருடனும் வாழப் பிடித்திருக்கிறது என்பது போன்ற ஒரு பிளாட் என்று ட்ரைலர் கட் சொல்கிறது.
நானுமே கூட தனுஷ் எப்போது இந்த மாதிரி நிச்சயத்திற்கு பின் காதல், கல்யாணத்திற்கு பின் காதல், நண்பனின் காதலியோடு காதல் என்பது போன்ற பிளாட்டை விட்டு வேறு கதைகளுக்கு போவார் என்று இந்த ட்ரைலர் பார்த்து யோசித்துக் கொண்டிருந்ததும் உண்மைதான்.
இருப்பினும் இது தனுஷ் ஆகிற்றே.. The most healing face on the planet இல் இவர் முகமும் என் லிஸ்டில் இருக்கிறது. இந்த முகச் சாயலோடு ஒரு உறவும் என்னோடு பயணித்துக் கொண்டிருப்பதும் கூடுதல் காரணம்.
தாமதமாக பார்த்தாலும் பிடித்து போன ஒரு கதை பற்றி சலிக்க சலிக்க பேசுவதில் எப்போதும் விருப்பமிருக்கத்தான் செய்கிறது.
அழகான கதை. அதை சினிமா மொழியில் எப்படி சொல்வார்கள் என்று தெரியவில்லை. ஒன் லைனர் என்பது சரியாக இருக்கலாம். கண்ணெதிரே நடந்த பெரும் விபத்து , பெரும் இழப்பு சமயங்களில் மனதை சிதைத்து கூறாக்கி போடும். உயிர் இழப்பு ஏற்பட்டால் தான் மனம் பாதிக்கப்பட வேண்டும் என்றில்லை.. உணர்வுகளை இழக்கும்படியான அதிர்ச்சிகளை தாங்கியவர்களுக்கும் இது சாத்தியம் தான். எல்லாருக்கும் இல்லாமல் யாரோ ஒரு சிலருக்கு இது உளவியல் சிக்கல்களை ஏற்படுத்தி விடும். உடனடியாக உணர முடியாத உளவியல் சிக்கலாக மாறி அனுபவிப்பவர்களை கொஞ்சம் கொஞ்சமாக வதைப்பதோடு அதன் வேலை முடிந்தது.
அப்படியான பெண் ஏன் இருவரை ஒரே சமயத்தில் காதலிக்கிறாள் என்பது கதையின் போக்கில் நாம் புரிந்து கொள்ள முடியும். கதையை சொல்ல இங்கே நான் எழுதவில்லை.
என்னைக் கவர்ந்த ஸ்க்ரீன் பிளே பற்றி கொஞ்சம் சொல்ல ஆசைப்படுகிறேன். படம் ஆரம்பிக்கும்போதே பிஹாரில் உள்ள ஒரு கிராமத்தில் தன்னுடைய வேற்று மத காதலனோடு 22வது முறையாக ஓடி போக நினைக்கும் ரிங்குவின் ஆர்ப்பாட்டத்தில் தொடங்குகிறது.
மழைக்கால இரவில் ரிங்கு ஓடுவதும் பின்னாடி ஆட்கள் துரத்துவதும் நாம் ஏதோ ஒரு ஒன்றை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். ஓடிக் களைத்து போன ரிங்கு யார் தன்னை தேடினார்களோ அவர்கள் காரிலேயே சோர்வாக அமர்ந்து கொள்ளும்போது என்ன இது வித்யாசமாக இருக்கிறேதே என்று தோன்றலாம். தனுஷின் இன்ட்ரோ ஷாட்.. ஏற்கனவே சொன்னபடி one of the most healing face on the planet. இது எனக்கு தோன்றுவது. இப்படியாக சில முகங்களை நான் பட்டியலிட்டு வைத்திருக்கிறேன்.
மயக்கமென்ன ராம்ஜி கண்கள் வழி எப்படித் தெரிந்தாரோ 11 வருடம் கழித்தும் கிஞ்சித்தும் மாறாத அதே தோற்றம். விஸ்வநாத அய்யர் எனும்போது கொஞ்சம் சிரமமாக இருக்கிறது. இன்னமும் இதையெல்லாம் சொல்ல வேண்டிய அவசியம் என்ன கொஞ்சம் டிஸ்கனெக்ட் ஆகிறது மனது.
MBBS படிக்கும் டீன் மகளை காதலிக்கும் விசு .. தன்னுடைய காதல் பற்றி சொல்ல வரும்போது அவள் என்னை காதலித்தாள் , (ஆகவே) நானும் அவளைக் காதலித்தேன் என்கிற வசனம் ஏன் பர்டிகுலராக அங்கே வைக்கப்படுகிறது என்பது நமக்கு பிற்பாடு தான் தெரிய வருகிறது.
திரும்ப திரும்ப ஓடிக்கொண்டிருக்கும் ரிங்குவை சமாளிக்க வழி தெரியாமல் அவள் பாட்டி அவசரமாக ஊர் பேர் தெரியாத ஒருவனோடு கல்யாணம் செய்து வைத்து அந்த வீட்டில் இருந்து வெளியேற்ற முடிவெடுக்கிறார். இப்போதும் அதே க்ளம்ப்சினஸ் ஸ்க்ரீன் பிளேவில் தெரிகிறது.
லாஃபிங் காஸ் என்பது 90ஸ் களில் 10வது படித்தவர்களுக்கு மட்டுமேயான வரப்பிரசாதம். அதை பாடப்புத்தகத்தில் படிக்கும்போதே சிரித்துக் கொண்டிருப்போம். அவ்வளவு சீக்கிரமெல்லாம் அது நம் கைகளுக்கு கிடைத்து விடாது. மீண்டும் +1 +2வில் சயின்ஸ் குரூப் எடுத்தால் ஏதோ கண்களில் காட்ட வாய்ப்புண்டு.
அப்படியான ஒன்றை இந்தத் திரைக்கதையில் சம்பந்தமே இல்லாமல் ஏன் கொண்டு வந்திருக்கிறார்கள்?
ஸ்க்ரிப்ட்படி தனுஷ் சாரா அலிகானை கட்டாய திருமணம் செய்ய வேண்டுமெனில் கட்டையால் அடித்துக் கூட தாலி கட்ட சொல்லி இருக்கலாம். ஆனால் அதற்கு பதிலாக லாஃபிங் கேஸ் பயன்படுத்தி சிரித்தபடி ஆனந்தமாக அந்த திருமணத்தை ஏன் நடத்துகிறார்கள்?
யார் பேச்சும் கேட்காமல் ஒரு தீவிர வேகத்தோடு அசாத்திய வெறியோடு வெளியேற ஓடும் பெண்ணை பாயசத்தில் மயக்கமருந்து கொடுத்து மயங்கியபடியே தாலி கட்ட வைத்திருக்கலாம் தான். ஆனால் அப்படி செய்யாமல் பாதி நினைவும் பாதி மயக்கமுமாக அவளுக்கு ஏன் திருமணம் நடத்தப்படுகிறது?
திருமணம் முடிந்த அடுத்த நாள் காலை எந்த எதிர்ப்பும் காட்டாமல் அவனோடு ரயிலில் அமர்ந்து போக அவளுக்கு எப்படி முடிகிறது?
திரைப்படத்தின் நம் கனெக்டிங் பாயிண்ட் எத்தனாவது நிமிடத்தில் நடைபெறுகிறது ? எனக்கு தெரிந்து அத்தனை க்ளம்ப்சியாக நடக்கும் ஸ்க்ரீன் பிளே வில் 35வது நிமிடத்தில் முதல் முறையாக திரைப்படத்தோடு உள்ளுக்குள் கனெக்ட் ஆக முடிந்திருந்தது.
ஏற்கனவே விசு வின் காதலி மேண்டி என்கிற மந்தாகினி விசுவின் நம்பிக்கைகளுக்கு எதிரானவள் என்பது சொல்லப்பட்டு விட்டது. அவனை தொலைபேசி மூலம் கட்டுப்படுத்துவதைக்கூட காட்சியாக்கி விட்டாயிற்று. இருப்பினும் தான் ஒரு விருப்பமற்ற பொருத்தமற்ற ஒரு காதலில் இருக்கிறோம் என்பதை விசு உணர்வது இருக்கட்டும். நமக்கு எப்படி காட்டுவார்கள் ?
அது இப்படி ஆரம்பிக்கிறது. திருமணம் முடிந்து தன்னுடன் வந்த பெண்ணை அவள் முதல் காதலனோடு சேரும்வரை ஹாஸ்டலில் பத்திரமாக தங்க வைத்துவிட்டு, தன்னுடைய நிச்சயதார்த்தத்திற்கு புறப்படுகிறான் விசு. அப்போது அவளிடம் அதற்கான தகவலை சொல்கிறான். அப்படி சொல்லும்போது அவன் பாடி லேங்குவேஜ் தான் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.
நாளைக்கு நானும்.. என் பிரெண்ட்ஸ் எல்லாரும் சென்னை போறோம்… தயங்கி தயங்கி பேசுகிறான். நீ இங்கயே இருக்கறதுனா இருக்கலாம்.. இல்ல… வேணுனா எங்ககூட வரதா இருந்தாலும் வரலாம்… இதை சொல்லி முடிக்க நிறைய நேரம் எடுக்கிறது. நான்கு முறை அதையே திரும்ப திரும்ப பயந்து பயந்து உன் முடிவென்னவோ அதுதான் என் முடிவு என்கிறான்.
விசுவின் அந்த தயக்கம், பயம், நீ என்ன முடிவு செய்கிறாயோ அதுதான் எனக்கென ஒரு முடிவும் நான் எடுக்க மாட்டேன் என்கிற நிலை எல்லாமே அவன் முதல் காதலி இடம் அதாவது அடுத்த நாள் நிச்சயம் செய்யப்போகும் பெண்ணிடம் அவன் அப்படித்தான் இது வரை இருந்திருக்கிறான் என்பதை நமக்கு கடத்தும் முயற்சி. விசுவை முழுக் கட்டுப்பாட்டுக்குள் வைத்து அவன் முடிவுகளை தானே எடுக்கும் ஒரு டாமினன்ட் கேரக்ட்டரை தான் விசு இது நாள் வரை காதலித்து வந்திருக்கிறான். இதை வாய்ஸ் ஓவரில் எல்லாம் வைத்து விட முடியாது.
இப்படித் தயங்கி தயங்கி விசு ரிங்குவிடம் பேசிக்கொண்டிருக்கும் போது.. ரிங்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அவனிடம் கேட்கிறாள்… நீ என்ன சொல்ற?
அப்போது பின்னணியில் ஆரம்பிக்கும் புல்லாங்குழலின் நோட்ஸ் விசுவைக் காட்டிலும் வேகமாக நம்முள்ளும் இறங்கி நமக்கு தனுஷின் சாரி விசுவின் உண்மையான மனநிலையை புரிய வைத்துவிடுகிறது.
(இதையெல்லாம் நாம் கண்டுகொள்ளாமல் விடுவதன் வினை தான் தனுஷ் என்றாலே இரண்டு ஹீரோ ஒரு ஹீரோயின் சப்ஜெக்ட் ஸ்டோரி தான் என்று பேச வைத்து விடுகிறது.)
எனக்கென்ன வேணுனா?.. உன் இஷ்டம் – விசு வழக்கமான பல்லவியை பாடுகிறான்.
அவள் மீண்டும் கேட்கிறாள் – வரட்டுமா? – உன் இஷ்டம் விசு பதில் அளிக்கிறான்.
வர வேண்டாமா என்று கேட்கிறாள் உனக்கென்ன தோணுதோ என்று வார்த்தைகளை முடிக்காமல் சிரித்து வைக்கிறான்
வரட்டா? என்று கண்களை அகல விரித்து கேட்கிறாள். பதில் ஏதும் பேசாமல் விசு தலை திருப்ப..
வரேன் என்கிறாள். அடுத்த நொடியே.. வா ப்ளீஸ் வா என்று தன் மனதை வெளிப்படுத்திக் கொள்கிறான் விசு.
இதுவரை தலையாட்டியாக மட்டுமே இருந்த தனக்கு முதல் முறையாக தன்னிடம் ஒபினியன் கேட்ட ஒரு சம்பவம் நடந்ததால் விசுவிற்கு ஏனோ சந்தோஷமாக இருக்கிறது. அதையும் இசை தான் நமக்கு கடத்துகிறது. முதல் சந்தோஷத்தை மென்மையான நடனமாக்கி யாருக்கும் தெரியாமல் கொண்டாடிக் கொள்கிறான்.
அந்த நேரம் பார்த்து ரிங்கு அவனிடம் அவளுடைய சிறு வயது சோகத்தை சிரித்துக் கொண்டே சொல்கிறாள். அப்பா, சஜத் கிற்கு அப்புறம் நீ தான் என் வாழ்க்கையில் வந்த நல்லவன் என்கிறாள்… ஒரு ஆனந்தம் அதற்கு அடுத்த கணம் பெரும் சோகம் என்பதான திரைக்கதை மூலம் மீண்டும் குழப்பமான மனநிலை நமக்கு வருகிறது.
விசுவின் நிச்சயதார்த்த காட்சிகள் க்ளிஷே ரகம். அந்தக் கூட வரும் நண்பன் ஒட்டவே இல்லை. அது கண்டிப்பாக பெரிய மைனஸ். நிச்சயதார்த்தத்திற்கு இரண்டு நாட்கள் முன்பாகவே ஸ்லிப் ஆகி விட்டாயா என்று ரிங்கு சிரிப்பதும் விழுந்தது அவளும் தான் என்பதையும் அடுத்தடுத்த காட்சிகள் சொல்கிறது.
“இனம் புரியாத” சந்தோஷம் ரிங்குவை பார்க்கும்போதெல்லாம் விசுவிற்கு வந்தபடியே இருக்கிறது. அதற்குத்தான் ஒரு பாடல். அதன் பின் சிறிய விவாதம். இப்போது ரிங்கு மீண்டும் விசுவோடு ஊரில் இருந்து திரும்ப வருகிறாள்.
விருப்பமில்லாமல் தான் கல்யாணம் நடந்தது ஆனா இப்ப அவ என் wife எனும்போது மீண்டும் bgm . ஒருவேளை அப்படியான வயதுகளில் வாழ்பவர் வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்க வாய்ப்பிருக்கிறது. அதன் பின் வரும் சின்ன ஹம்மிங்… ஹ்ம்ம்ம் ரஹ்மான்….
டெல்லி வரும் வரை விசு யாரோடும் பேசவே இல்லை. மௌனமாக உள்ளுக்குள் எதையோ process செய்து கொண்டிருக்கிறான் என்பது மட்டும் புரியலாம். அது என்னவாக இருக்கும் ?
டெல்லிக்கு வந்ததும் அவர்களிருவருக்கும் ஆன உரையாடல் தொடங்குகிறது .
ரிங்கு தான் அப்படி நெருக்கமாக பாடல் பாடி ஆடி இருக்க கூடாது என்று வருந்துகிறாள். மேண்டியிடம் பேசி தான் சரி செய்து விடுவதாக கூறுகிறாள்.
நமக்கு நடந்தது கட்டாயக் கல்யாணம்தானே. உங்களுக்கு என்னை முன்ன பின்னக் கூடத் தெரியவும் தெரியாதே.. என்னை என் லவர் வந்து கூட்டிட்டு போய்டுவாருன்னு சொல்றேன். நானும் போய்டுவேன்ல… டெல்லி வந்தப்புறம் உங்க வழி வேற என் வழி வேறன்னு தானே முடிவெடுத்தோம் ?
பதட்டமாக ரிங்கு விஷயங்களை சரி செய்ய முயற்சிக்கும்போது
வெகு நிதானமாக லேசான புன்னகையுடன் விசு கேட்கிறான்… அப்போ எல்லாம் சரி ஆகிரும்ல? முதல்ல இருந்தா மாதிரி…
ஆகாதா?
நானே முதல்ல இருந்தா மாதிரி இல்லன்னா .. மத்ததெல்லாம் எப்படி முதல்ல இருந்தா மாதிரி ஆகும் ? பெரும் அவஸ்தையோடு அவள் கண்களை பார்த்து விசு கேட்கும்போது தான் அவன் மனதிற்குள் ப்ராசஸ் செய்தது எதை என்பது புரிய வருகிறது.
எனக்கு கல்யாணம் நின்னு போனது கோபமில்லை.. அதுக்கு கோபமே வரலயேன்னு தான் கோபம். எல்லாமே நல்லாத்தான் போயிட்டிருந்தது.. இப்போ எல்லாமே மாறிருச்சு. நீ வந்து மாத்திட்ட என்று அவளை பார்த்து தவிக்கிறான். எனக்கு வலிச்சதே இல்ல இப்ப வலிக்குது .. இது நாள் வரை நான் அழுததே இல்ல.. இப்போ காரணமே இல்லாம அழறேன்.. உன் பாய் பிரென்ட் வந்த உடனே நீ போய்டுவ.. அப்புறம்?
அதை நெனச்சாலே எனக்கு அப்செட் ஆகுது… ஆகக் கூடாதுல்ல?
நீ ஏன் என் வாழ்க்கைல வந்த? நீ இன்னொருத்தரோட லைஃப்.. அப்புறம் ஏன் … இயலாமையின் கணங்கள் விழிகளில் நீராகிறது. விசு கண்களில் தேங்கும் நீரோடு அவளிடம் தன்னுடைய காதலை, அது வந்த கணத்தை, அது நடக்கவே முடியாத ஒன்றாக மாறபோவதை சகித்து கொள்ள முடியாமல் அவளிடம் சொல்லி அழுகிறான்.
எனக்கு கல்யாணம் நின்னுருச்சுனு கோபம் இல்லடி… எனக்கு உன்ன பிடிச்சிருச்சு… எனக்கு என்ன பண்றதுன்னே தெரில… மீண்டும் ஹம்மிங்… ஒன்றையொன்று நெருங்கிய முகங்கள் ..தன்னை மறந்த ஒரு கணம் அவள் விசுவை வேகமாகத் தழுவிக் கொள்கிறாள். விசுவின் நிறைவேற முடியாத வலிக்கான சிறு மருந்தாக அந்த தழுவலை நாம் உணர்ந்து கொள்ளலாம்.
அடுத்த கணமே சஜாத் வந்து விட்டதாக அவள் சொல்வதும், அவனைத் தேடி ஓடுவதும் -அந்த நிமிடம் அணைப்பிலிருந்து விலகி மீண்டும் விரக்தி செல்வதுமாக தனுஷை தவிர யாருக்கும் இந்த விசு பொருந்தி போகவே மாட்டான் என்று தான் தோன்றியது. இங்கே தான் நான் இரண்டாவதாக கதையோடு கனெக்ட் ஆன இடம்.
ஆக விசு ஒருதலை காதல்.. இனி சஜாத் வந்து ஏதாவது நடந்து மீண்டும் இவர்கள் சேருவார்களா இல்லை.. சஜாத்திற்கு விட்டு கொடுத்து விசு வலியோடு வாழப் போகிறானா எனும்போது நமக்கொரு அதிர்ச்சி வைத்தியம் தரப்படுகிறது.
trauma வில் சிக்கியது இப்போது பார்வையாளராக இருக்கும் நாம் தான். காரணம்.. சஜாத் நிஜமான ஆள் இல்லை. அவளுடைய ஹெலூஸினேஷன். அவளுடைய அப்பா அம்மாவை கண் முன்னே எரித்து கொன்ற போது நடந்த மனசிதைவு தன்னைத் தானே சரி செய்து கொள்ள ஒரு cope up மெக்கானிஸத்தை கையில் எடுக்கிறது.
அதுதான் ஹெலூஸினேஷன். அப்பா ஜாடையில் இருக்கும் ஒருவன் தான் அவள் காதலன். இல்லாத ஒரு காதலை சாத்தியமற்ற ஒரு சந்திப்பை நோக்கித்தான் அவள் ஓடிக் கொண்டே இருந்திருக்கிறாள் என்பது இப்போதுதான் reveal செய்கிறார்கள்.
அதையும் உடனடியாக எல்லாம் சொல்லி விடவில்லை. சம்பந்தமே இல்லாமல் டெல்லி வீதியில் சஜாத் யானையில் வருவதும், அவனை ஓடி சென்று அணைத்து கொள்வதும் உள்ளுக்குள் ஒட்டவே ஒட்டாது. அப்படிதான் காட்சியாகவும் வைத்திருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. என்ன இது சம்பந்தமில்லாமல் ஒரு ஸீன்? என்று கொஞ்சம் அயர்ச்சி வருகிறது.
விசு அவளின் இல்லாத காதலன் பற்றிய உண்மை அறியாமல் அப்செட் ஆகிறான். ரிங்கு அவன் மானசீக காதலனுடன் அவளுக்கு பிடித்த உணவை ஆர்டர் செய்து சாப்பிடுகிறாள். சஜ்ஜத்தை நண்பனுக்கு அறிமுகம் செய்யும்போதும் நமக்கு குழப்பம் வருகிறது. காரணம் சஜாத் ஒரு மந்திரவாதி.. அவன் கண்களுக்கு தெரியாமல் மறையும் வித்தை கற்றுக் கொண்டு வந்திருக்கிறான். ஆகவே இது அப்படியான ஒன்றாக இருக்குமோ… அந்த நண்பன் உண்மை சொல்லும் வரை நமக்கும் புரியவில்லை.
விசுவிற்கு உண்மை தெரிந்ததும் ரிங்குவை பார்க்க ஓடுகிறான்.
உயிரினை காதல் தாங்காதா … ஒரு விழியாவது தூங்காதா .. மொழி இருந்தும்.. வழி இருந்தும்… என் காதலை சொல்ல முடியாதா … ரஹ்மானா.. இல்லை அந்தக் குரலா… கொஞ்ச நேரமேனும் சில துளியேனும் அந்தக் காதல் நம்முள்ளும் இறங்கியே தீருகிறது.
அவளை காப்பாற்றும் பொருட்டு நடத்தப்படும் நாடகம் தான் டிவோர்ஸ் சைன் பண்ணிட்டு போ என்பது. அப்போது அவள் பேசுவதுதான் ட்ரைலரில் காட்டப்படும்
எனக்கு உன்னையும் பிடிச்சிருக்கே.
அதன் பின் அந்த ஹெலூஸினேஷனுக்கு எப்படி சிகிச்சை தரப்படுகிறது.. அவள் அதில் இருந்து வெளியே வந்தாளா.. விசுவை நேசித்தாளா இல்லை ஹெலூஸினேஷனிலேயே இருக்க முடிவு செய்தாளா என்பதும் பிற்பாடு கதை. …
அவள் மாத்திரை சாப்பிடும்போதெல்லாம் ஹெலூஸினேஷன் சஜாத்திற்கு உடல்நிலை சரி இல்லாமல் போகிறது.
குடித்திருக்கும் தனுஷ் .. அந்த குட்டி சீனில் கொள்ளை கொண்டு போகும் கண்கள்… லவ் மி லிட்டில் சாங்.
ரொம்பவெல்லாம் வேணாம்… இத்துனூண்டு நேசித்து போயேன் என்கிற யாசிப்பு … என்பதெல்லாம் எப்போதும் எவெர்க்ரீன் சோ க்யூட் வரிகள்.
சரி திரைக்கதைக்கு வருகிறேன். படம் முதலில் பார்க்கும்போதே என்ன இது எதற்கு இதை டப்பிங் செய்திருக்கிறார்கள், டப்பிங் செய்தததால் தான் இத்தனை clumsiness இருக்கிறதா ? கொஞ்சம் கூட மனதில் ஒட்டாத துணைக்க கதாபாத்திரங்கள், குரல்கள், டப்பிங் வசனங்களின் உச்சரிப்புகள் புரிந்து கொள்ளவே முடியாத காட்சியமைப்புகள்…
அதன்பின் தான் எனக்கு புரிந்தது. படம் ஹெலூஸினேஷன் சம்பந்தப்பட்ட குழப்பமான மனநிலையுடைய பெண்ணை சார்ந்தது… ஆகவே தெரிந்தே தான் அவள் மனநிலையை நமக்கும் கடத்த காட்சிக்கு காட்சி இந்த clumsiness பயன்படுத்தப்பட்டுக் கொண்டே வந்திருக்கிறது.
இதை முதல் முறை பார்த்த பிறகு என்னவாக இருக்கும், இவ்வளவு நல்ல பிளாட்டில் ஏன் இவ்வளவு ஒட்டாத தன்மைகள் வருகின்றன என்பது பற்றியெல்லாம் தூங்காமல் மீண்டும் மீண்டும் யோசித்து பார்த்த போது தான் மூளைக்குள் இந்த பாயிண்ட் சிக்கியது.
ஒரே ஒரு வருத்தம்.. இந்த திரைப்படம் ரிமேக் செய்யப்பட்டிருக்க வேண்டிய ஒன்று. தனுஷ் மற்றும் சின்மயி தான் இந்தக் குழப்பங்கள் தாண்டி தமிழில் படத்தை பார்க்க வைக்கும் முக்கிய காரணங்கள். அதன் பின் ரஹ்மான்…. சாரா அலி கானை பிடித்தவர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் பிடிக்கும்.. உன்மத்தத்தை பைத்தியக்காரத்தனத்தை அப்பட்டமாக வெளிக்காட்டாமல் subtle ஆக கண்ட்ரோல் உடன் நடிப்பது சாதாரண விஷயம் இல்லை.
ஹெலூஸினேஷன்களில் சிக்கி கொள்ளும் எல்லோருக்கும் இப்படியான விசு அமைந்து விடுவதில்லை… ஆனாலும் இன்னமும் ஹெலூஸினேஷனில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஆட்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
கிடைக்காத ஒரு அன்பு, சாத்தியமற்ற ஒரு நேசம், பரஸ்பரம் பகிர்ந்து கொள்ள முடியாத முத்தங்கள், வாழ்வில் இனி வரவே போகாத காதலின் தருணங்கள்… அனைத்தையும் அவர்கள் ஹெலுசினேட் செய்கிறார்கள். நிறைய பேர் அதிலிருந்து யதார்த்த வாழ்க்கைக்கு மாறினாலும் ஒரு சிலர் ஹெலூஸினேஷன் போதும் என நிஜங்களை சந்திக்க தயங்கியபடியே ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
காதல் இவர்கள் கதவையும் பல கரங்கள் கொண்டு தட்டத்தான் செய்கிறது. ஆனால் இவர்கள் மனம் ஒரு பெயரை மட்டுமே உச்சரித்தபடி கதவுகளை இறுக பூட்டிக் கொண்டு ஹெலூஸினேஷனில் அலைகிறது. நிஜத்திற்கும் ஹெலூஸினேஷனிற்குமான வித்தியாசங்களை சந்திக்க பயப்படுகிறார்கள். யதார்த்தத்தின் பிடிகளுக்குள் அடங்க மனமில்லாமல் ஹெலூஸினேஷனில் உயரே பறந்து கொண்டிருக்கிறார்கள்.
அவர்களுக்கு இந்த உலகம் உளவியல் நோயின் ஏதோ ஒரு பெயரை வைத்துக் கொள்ளட்டும்… அந்தப் பெயர் அவர்கள் காதுகளுக்கு எட்டும் தூரத்தில் அவர்கள் இல்லை என்பது மட்டும் தான் அவர்களின் தற்போதைய நிம்மதி.